மூங்கில் (Bamboo)

Latest News

மூங்கில் (Bamboo) புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். புல் வகையிலேயே மிகவும் பெரிதாக வளரக்கூடியது மூங்கிலேயாகும். சில மரங்கள் ஒரு நாளில் ஒரு மீட்டர் உயரம் வரை வளர்கின்றன. இவற்றில் ஏறத்தாழ 1000 சிற்றினங்கள் உள்ளன. உலகம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட இனவகை மூங்கில்கள் வளர்க்கப்படுகின்றன. மூங்கில் புல் வகையைச் சேர்ந்த ஒரு மரம் ஆகும். மூங்கில் மரம் 40 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் அதிக அளவு பருமன் 1 சென்ட்டிமீட்டரிலிருந்து 30 சென்ட்டிமீட்டர் வரை இருக்கும். மூங்கில் மிகவும் வேகமாக வளரக்கூடிய ஒரு மரம். ஒரே நாளில் 250 cm (98 in) கூட தக்க சூழ்நிலையில் வளருவதாகத் தாவரவியலாளர் கண்டறிந்துள்ளனர்.ஒரு மூங்கில் மரத்தின் வயது 60 ஆண்டுகள். ஆனால், அது 60 அடி உயரம் வரை வளரும் காலமே 59 நாட்கள்தான். கடல் மட்டத்திற்கு மேல் 4000 மீட்டர் உயரம் உள்ள பிரதேசங்களில்தான் மூங்கில் நன்றாக வளரும். எனவே மலைச்சரிவுகளும், மிக வறண்ட பகுதிகளும் மூங்கில் வளர்வதற்கு ஏற்ற இடங்கள்.சீனா, இந்தியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா,நேபாளம்,பங்களாதேசு, கோஸ்டிரிக்கா, கென்யா ஆகிய நாடுகள் மூங்கில் உற்பத்தியில் முன்னணி நாடுகளாக இருக்கின்றன.

இந்தியாவில் 156 வகை மூங்கில் இனங்கள் பயிரிடப்படுகின்றன. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்காளம், ஒரிசா, ஆந்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்கள் முதலிடம் பெற்று நிற்பவை. மூங்கிலின் வேர் நிலத்தை ஒரு அடிக்கு மேல் பற்றிக் கொண்டிருக்கும். மூங்கில் ஒன்றோடொன்று இணைந்து வளரும் தொகுப்பு 6 கியூபிக் மீட்டர் வரை இருக்கும்.

மூங்கில் குடிசை வீடுகள் கட்டுவதில் மரமாகவும், கட்டிடம் கட்டும் தொழிலிலும் (சாரம் கட்ட), கைவினைப் பொருட்கள் செய்யவும், சிறு தொழில் மற்றும் குடிசைத் தொழில்கள் உள்ளிட்ட ஏராளமான தொழில்களிலும் மிக முக்கிய பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. கிட்டத்தட்ட 1500 பயன்களுக்கு மேல் தரக்கூடிய மூங்கில் மரத்திலிருந்து இன்றும் கூட பலப் பயன்களைப் பெற முடியும் என்று வேளாண் ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவில் வளர்க்கப்படும் மூங்கிலில் 40 சதவீதம் மரக்கூழ் செய்யவும், காகிதத் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. மற்றவை ஒன்று சேர்க்கப்படாத பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

இளம் மூங்கில் குருத்துகள், இலைகள் ஆகியன பாண்டா, சிவப்பு பாண்டா, மூங்கில் லெமூர் விலங்குகளின் முதன்மையான உணவாகும். எலிகளும் இவற்றின் பழங்களை உண்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

மூங்கில் புல் வகையைச் சேர்ந்தது. இந்த வகையில் பெரிதாகவும், அதிக உயரமாகவும் வளரும் தாவரம் மூங்கிலாகும். பச்சைத் தங்கம், ஏழைகளின் மரம் என அழைக்கப்படும் மூங்கில், மரங்கள் பட்டியலில் இருக்கிறது. இதன் காரணமாக இந்திய வனச்சட்டம் 1927-ன் படி மூங்கிலை வெட்டவோ, ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு செல்லவோ அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இந்நிலையில், விவசாயிகளின் வருமானத்தை 2020- ம் ஆண்டுக்குள் இருமடங்காக உயர்த்தும் வகையில் மத்திய அரசு சில திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதில் ஒருபகுதியாக மூங்கிலை மரங்கள் பட்டியலிலிருந்து நீக்கம் செய்ய முடிவு செய்தது. இதன்படி வனச்சட்டத்தில் திருத்தம் செய்து அவசரச் சட்டம் ஒன்றை கடந்த மாதம் 23- ம் தேதி உருவாக்கியது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார். அதைத் தொடர்ந்து, இந்த அவசரச் சட்ட மசோதாவைப் பார்லிமென்டில் தாக்கல் செய்திருந்தார் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன். இந்நிலையில், நேற்று இந்த அவசரச் சட்டத்துக்கு உறுப்பினர்களின் ஒப்புதல் கிடைத்ததை அடுத்து, இந்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது. 

இந்தச் சட்டம் நிறைவேறியதால் மூங்கில் வளர்ப்பு மற்றும் அது தொடர்பான பல்வேறு தொழில்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது தொடர்பாக முன்னாள் உதவி வனப்பாதுகாவலர் ராஜசேகரனிடம் பேசினோம். ‘‘ தாவரங்களில் அதிகளவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடியது மூங்கில். இதை மரங்களின் பட்டியலிலிருந்து நீக்கியதால் மூங்கில் வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட வாய்ப்புள்ளது. மானாவாரி நிலங்கள், தரிசு நிலங்களில் மூங்கிலை உற்பத்தி செய்வதன் மூலமாகப் பொருளாதார முன்னேற்றம் அடைவதுடன், கரியமில வாயுவின் அடர்த்தியையும் குறைக்கலாம். மூங்கில் உற்பத்தியில் உலகளவில் சீனா முதலிடத்தில் உள்ளது. அதிக சத்து வாய்ந்த மூங்கில் அரிசி உணவு, மூங்கில் குருத்திலிருந்து செய்யப்படும் ஜுஸ் போன்றவை சீனாவில் பிரபலம். இனி, இந்தியாவிலும் மூங்கில் தொடர்பான தொழில்கள் அதிகளவில் வளர வாய்ப்புள்ளது.

 பேப்பர் உற்பத்தியில் மூங்கில் முதன்மையானது. தேவையான அளவு மூங்கில் கிடைக்காததால்தான் யூகலிப்டஸ், வாட்டில் போன்ற மரங்களை காகித ஆலைகள் பயன்படுத்தி வருகின்றன. இன்றைக்கும் ரூபாய் தாள் போன்ற தரமான காகிதம் மூங்கில் கூழிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. மூங்கிலை நடவு செய்தால் மூன்று ஆண்டுகள் முதல் அறுவடை செய்யலாம். பக்கக் கிளைகளை அறுவடை செய்வதால் இது விவசாயிகளுக்குத் தொடர் வருமானம் கொடுக்கும். மத்திய அரசின் இந்த அவசரச் சட்டம் கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தும். அதே வேளையில், வனப்பகுதிகளில் உள்ள மூங்கில் இன்னமும் மரங்கள் பட்டியல் இனத்தில்தான் உள்ளது. வனப்பகுதியில் உள்ள மூங்கிலுக்கு இந்த அவசரச் சட்டம் பொருந்தாது என்பதையும் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். மூங்கில் வளர்ப்பு, மூங்கில் பொருள்கள் தயாரிக்கும் முறைகள், மதிப்புக்கூட்டும் வழிமுறைகள் ஆகியவற்றை விவசாயிகளுக்குக் கற்றுக்கொடுக்கும் முயற்சியில் அரசு இறங்கினால் சீனாவைப் போல, ஏன் அதைவிட அதிகளவு மூங்கில் வியாபாரமிங்கு நடைபெற வாய்ப்புள்ளது.தற்போது நிறைவேறியுள்ள இந்த அவசரச் சட்டம் வனப்பகுதிகளில் செல்லாது. வனப்பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ள விவசாயிகள் மூங்கில் வளர்ப்பில் ஆர்வம் காட்டலாம். 

Leave a Reply

Your email address will not be published.