இந்திய அரசு பணியில் சேர விருப்பமா? நீங்கள் அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்

Latest News

2022ஆம் ஆண்டு முதல் மத்திய பணிகளில் சேருவதற்காக பொது தகுதிகாண் நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார் இந்திய பணியாளர், மக்கள் குறைதீர், அணுசக்தித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்.

டெல்லியில் 2021ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ் அதிகாரிகளின் கையேட்டை வெளியிட்ட அவர், ஏற்கெனவே மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்தபடி இதுவரை பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி), ரயில்வே தேர்வாணையம் (ஆர்ஆர்பி), வங்கிப்பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐபிபிஎஸ்) ஆகியவை நடத்தி வந்த தேர்வுகளை பொது தகுதிகாண் தேர்வு (சிஇடி)என்ற பெயரில் மத்திய அரசின் தேசிய ஆள்சேர்ப்பு முகமை (என்ஆர்ஏ) நடத்தும் என்று கூறினார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

மத்திய அரசு பணியில் தொழில்நுட்ப பதவிகள் அல்லாத குரூப் பி, குரூப் சி ஆகிய பிரிவுகளில் சேர விண்ணப்பிப்போருக்கு என்ஆர்ஏ என்ற பல்நோக்கு ஒருங்கிணைப்பு முகமையே பொது தகுதி தேர்வை நடத்தும்.

இந்த தேர்வு, இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு மையத்திலாவது நடத்தப்படும். இதன் மூலம் தொலைதூரத்தில் உள்ளவர்களும் அவர்கள் சார்ந்த மாவட்ட மையத்திலேயே தேர்வை எழுதலாம்.

பெண்கள், மாற்றுத்திறனாளி, தொலைதூர விண்ணப்பதாரர்கள், இனி அவர்களின் சமூக பொருளாதார பின்புலத்தை கடந்து இந்த தேர்வுகளை எழுத முடியும். ரயில்வே, வங்கி, மத்திய பணியில் சேர பொதுவான தேர்வை எழுதுவதன் மூலம் தனித்தனியாக இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் நேரமும் அதற்கான மையங்களுக்கு தனித்தனியாக பயணிக்க வேண்டிய நேரமும் சேமிக்கப்படும்.

இந்த தேர்வு கணிப்பொறி பயன்படுத்தி எழுதக்கூடியதாக இருக்கும்.

தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்களுடைய சான்றிதழ்களில் அத்தாட்சி கையொப்பம் பெற அரசு அதிகாரிகளிடம் கையொப்பம் பெறுவதற்கு பதிலாக விண்ணப்பதாரரே சுயமாக தமது சான்றிதழ் நகலில் அத்தாட்சி கையெழுத்திடலாம்.

பணியில் சேர தேர்வானவுடன் தொடங்கும் முதல் மூன்று மாதங்களை ஐஏஎஸ் அதிகாரிகளின் உதவி செயலாளர்களாக பணிபுரிய தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும்.

பொது தகுதிகாண் தேர்வு இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா பரவல் நாடு முழுவதும் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடத்துவதற்கு இந்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.